கடந்த ஓரிரு வாரங்களாக பலரது கேள்வி “கோடை மழை எப்போது துவங்கும்?” விவசாய பெருங்குடி மக்கள் மாத்திரம் அல்லாமல் சாமானியர்களும் மழையை ஏங்கி தவிக்கும் நிலையில் தற்போது வெப்ப சலன மழை உருவாக ஏதுவான நிலைக்கு வானிலை தயார் ஆகி வருவது மகிழ்வு அளிக்கும் செய்தி.
நாம் பல முறை கூறியது போல் சூரியனின் நேர் கதிர்கள் பூமியின் இரு அரை கோலங்களின் இடையே நகரும் நிகழ்வே பருவ மழைக்கான முக்கிய காரணி. சூரியனின் கதிர்களை ஓரிரு வாரங்களுக்கு பிறகு பின் தொடரும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) மழை கொடுக்கும் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. தற்போது பூமத்திய ரேகைக்கு சற்று தெற்கே நிலை கொண்டுள்ள இந்த வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி அடுத்த ஓரிரு வாரங்களில் வட அரைக்கோள பகுதியை அடைந்து விடும். இதன் காரணமாக மழை நிகழ்வுகள் இந்தியா துணைக்கண்ட பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதே போல் வெப்ப சலன மழைக்கு காற்று முறிவு பகுதி (Line of wind Discontinuity) ஓர் முக்கிய காரணி ஆகும். வானிலை படிவங்கள் வரும் நாட்களில் இந்த காற்று முறிவு பகுதி குறிப்பிடும் படி உருவாகக்கூடும் என எதிர் பார்க்கின்றன. இதனால் முதலில் கர்நாடகா மற்றும் கேரளாவில் முதலில் துவங்கும் கோடை மழை பிறகு படிப்படியாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் ஏற்படக்கூடும்.
சித்திரை புத்தாண்டு மழை நிகழ்வுகளுடன் வருமென எதிர்பார்ப்போம்.