உட்புற தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மழை வாய்ப்பு

Weather Update
Reading Time: 2 minutes

தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை காலமே பிரதான மழைக்காலம் என நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் மாசி / பங்குனி மற்றும் சித்திரை மாதத்தின் முதல் பாதியில் ஏற்படும் வெப்ப சலன கோடை மழை உட்புற பகுதிகளிக்கு ஓர் வரப்ரசாதம் என கூறலாம். வெப்ப சலனம் என கூறப்பட்டாலும் பொதுவாக காற்றில் ஏற்படும் சலனமே கோடைகாலங்களில் ஏற்படும் மழைக்கு ஓர் முக்கிய காரணி

வானிலை படிவங்கள் எதிர்பார்தபடி தமிழகத்தில் பரவலாக இரவு நேர வெப்ப நிலை இன்று உயர்ந்து காணப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணி நிலவரப்படி இந்தியா வானிலை துறை மையங்களில் சென்னை, கோவை, திருச்சி போன்ற அநேக இடங்களில் கடந்த சில நாட்களை விட ஓரிரு டிகிரி உயர்ந்தே பதிவாகி உள்ளது. சற்றே வலுபெற்ற கீழை காற்று இந்த மாறுதலுக்கு ஓர் காரணம் எனக்கூறலாம்

வட இந்தியாவில் மேற்கத்திய கலக்கம் காரணமாக பல இடங்களில் நல்ல மழை பெய்த நிலையில், மத்திய இந்திய பகுதிகளில் காற்றின் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்துள்ளது. மேற்கில் இருந்து வரும் உலர்ந்த காற்று சற்றே ஈரப்பதம் அதிகம் உள்ள கீழை காற்றிடையே ஊடுருவும் போது இரு வெவ்வேறு வளிதிண்மம் (air mass) காரணமாக ஏற்படும் சலனமே இந்த மழைக்கு காரணம்.

தற்போது மத்திய இந்திய பகுதிகளில் நிலவி வரும் இந்த சலனம் அடுத்த ஓரிரு நாட்களில் தென் இந்திய தீபகற்ப பகுதி வரை இறங்கி வரக்கூடும். இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கீழைக்காற்று வலுப்பெற்று இருப்பதால் இந்த பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைவே