கடந்த மாதம் முதல் முறையாக வேளாண் மக்களுக்கு உதவும் நோக்கில் நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவை செய்திருந்தோம். ஜனவரி 21ஆம் தேதி அன்று பிப்ரவரி மாதம் ஏற்படக்கூடிய மழை நிகழ்வுகளை ஒரே ஒரு வரைபடமாக கொடுத்தோம். இது சற்று குழப்பமாக உள்ளதாகவும் மழையின் அளவு பற்றி எந்த குறிப்பும் இல்லை என்ற பரிந்துரை நமது வாசகர்களிடம் இருந்து வந்தது.
இந்த முறை மார்ச் மாததிற்கான மழை எதிர்பார்புகளை ஐந்து வாரங்களாக பிரித்து பெய்யக்கூடிய மழை அளவை பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். நாம் பல முறை கூறுவது போல் நீண்டகால வானிலை தொகுப்பில் தவறுகள் வருவதற்கு வாய்ப்புகள் எப்போதுமே அதிகம். இதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இந்த பதிவின் நோக்கம் வேளாண் மக்களுக்கு ஓரிரு வாரங்கள் முன்பே மழை வரக்கூடிய சாத்தியக்கூறுகளை கொடுப்பது மட்டுமே. தொடர்ந்து நாம் இதை செய்து வரும் போது படிப்படியாக நமது தவறுகள் மற்றும் வானிலை படிவங்களில் உள்ள உள்ளார்ந்த சார்பு தவறுகளை (Inherent Model Bias) குறைக்க வழி வகுக்கும்.
கடந்த பதிவில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பெரும்பாலும் மழை நிகழ்வுகளை ஓரிரு நாட்களின் வேறுபாட்டுடன் பதிவிட்டு இருந்தோம். கேரளாவில் காட்டிய மழை நிகழ்வுகள் பெரும்பாலும் நடந்தன ஆனாலும் மழையின் அளவு எதிர்பாற்பை விட சற்று குறைந்து காணப்பட்டது. இந்த முயற்சியில் தொடர்ந்து நாம் கற்று கொண்டிருப்பதே தவறுகளை திருத்த வழி வகுக்கும்.