தமிழகத்தில் இயல்பிற்கு குறைவாக வெப்ப சலன மழை வாய்ப்பு

Weather Update
Reading Time: 2 minutes

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பொய்த்தது நாம் அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் பலரின் எதிர்பார்ப்பு குளிர்கால மழை மற்றும் வெப்பசலனம் காரணமாக முர்கோடை காலங்களில் ஏற்படக்கூடிய மழை நன்கு இருக்குமா என்பதே. கடந்த மாதம் நமது வலைப்பதிவில் மழை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இயல்பிற்கு குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து வரும் குளிர்காலம் மற்றும் கோடைக்காலங்களில் பெருவாரியான ஆண்டு இயல்பிற்கு குறைவாகவே பெய்து உள்ளது என எடுத்து காட்டினோம். 

இதேபோல் 2019ஆம் ஆண்டு துவங்கியது முதலே பெரிய மழை நிகழ்வு எதுவும் நடை பெறவில்லை என்பதே உண்மை, இதை இந்திய வானிலை துறை தினசரி மழை குறியீடு வரைபடம் தெள்ள தெளிவாக எடுத்து காட்டுகிறது.  ஆண்டின் துவக்கம் முதல் நான்கு தினங்களில் மாத்திரமே மழை பதிவாகி உள்ளது.  சராசரியாக நேற்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் 21.5 மிமீ மழை பெய்ய வேண்டிய நிலையில் வெறும் 3.2 மிமீ மழையே பதிவாகி உள்ளது. 

இந்நிலையில் வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி பலரும் வருத்தம் கலந்த பயத்துடன் கேட்பதால் மூன்று முக்கிய காரணிகள் கொண்டு வரும் 4 / 5 வாரங்களுக்கு என்ன எதிர்பார்ப்பு தேவை என்பதை கொடுக்க முயற்சி செய்துள்ளோம்.  மழை வருவது இயற்க்கையின் கையில் உள்ளது, எனினும் மழை வருமா? என்ற கேள்விக்கு இயன்ற வரையில் உண்மையாகவும் மனசாட்சிக்கு கட்டுபட்டும் கொடுப்பது அனைவருக்கும் ஓர் தெளிவு கொடுக்கும் என்பதற்காக இந்த முயற்சி.

வடகிழக்கு பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு இடப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம் (, மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) இவைகளின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

  1. நீண்ட கால வானிலை படிவங்கள் அடுத்த 4 / 5 வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கத்திய கலக்கம் ஏற்படக்கூடும் என கணிக்கின்றன.  இவை பொதுவாக வட இந்திய பகுதிகளில் மாத்திரமே மழை கொடுக்கக்கூடும். சில சமயங்களில் இயல்பிற்கு தெற்காக மத்திய இந்திய பகுதி வரை ஊடுருவி வரும் காலங்களில் காற்று சலனம் காரணமாக தென் இந்திய உட்புற பகுதிகளில் மழை ஏற்படுத்தும்.  தொடர்ந்து மேற்கத்திய கலக்கம் உருவாகி வரும் சூழல் ஓர் சாதகமான காரணி என எடுத்து கொள்ள முடியாது, ஏனெனில் இயல்பாகவே வட இந்திய பகுதிகளுக்கு மாத்திரமே மழை கொடுக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகம்.
  2. இதே போல் OLR முன்கணிப்பு படிவங்கள் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) பூமத்திய ரேகைக்கு தெற்காகவே மார்ச் மாதம் / ஏப்ரல் முற்பகுதி வரை இருக்கக்கூடும் என கோடிட்டு காட்டுகின்றன. இந்த ITCZ வடதுருவம் வந்துவிட்டால்  வெப்ப சலனம் காரணமாக மழை ஏற்பட ஏதுவான சூழலை ஏற்படுதக்கூடும் . தென் துருவத்தில் பூமத்திய ரேகையை ஒட்டி நிலை கொண்டு இருந்தால் வெப்ப சலன மழைக்கான சாதகமான சூழல் ஏற்படாது.
  3. மேடேன் ஜூலியன் ஒத்த அலைவும் (MJO) பசிஃபிக் பெருங்கடல் பகுதியிலேயே அடுத்த 2 / 3 வாரங்களுக்கு  நிலையாக நீடிக்கக்கூடும் என வானிலை படிவங்கள் கூறுகின்றன, நாம் ஏற்கன்வே கூறியது போல் பசிஃபிக் பெருங்கடலில்  (MJO) இருந்தால் இந்திய பெருங்கடல் பகுதியில் மறைவு நிலையே நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.  

தற்போது உள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் வரை பெரிய அளவிற்கான வெப்ப சலன மழை நிகழ்வு ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது.  கோடை மழையை நம்பி பயிர் செய்ய நினைத்திருக்கும் விவசாயிகள் சற்று பொறுமையுடன் இருப்பது உசிதம்.