நமது வலைபதிவில் பல முறை நாம் கூறும் ஓர் கருத்து “இந்தியா போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் வானிலை மிகவும் மாறுதலுக்கு உட்பட்டது. இதன் காரணமாக நீண்ட கால வானிலை கணிப்புகளின் துல்லியமும் மாறுதலுக்கு உட்பட்டது. இதனாலயே நமது வலைபதிவில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உட்பட்ட கணிப்புகளை கொடுத்து வருகிறோம்.
எனினும் வேளாண் மக்களுக்கு நீண்ட கால வானிலை எதிர்பார்பு மிகவும் அவசியம் உழவு, நடவு, அறுவடை, தானிய சேமிப்பு இவை அனைத்திலும் காலம் தவறி பெய்யும் மழை பயம் விவசாயிகளுக்கு எப்போதுமே உள்ளது. இதை போல் நிலத்தடி நீர் குறைந்து காணப்படும் பகுதிகளில் வரக்கூடிய மழை நிகழ்வுகள் தெரிந்தால் அதற்கு ஏற்றபடி விவசாயிகள் தங்களது பாசன அட்டவணையை மாற்றி கொள்ள வழி வகுக்கும்.
நீண்ட கால வானிலை எதிர்பார்பு மாறுதலுக்கு உட்பட்டது எனும் எச்சரிக்கையுடன் பிப்ரவரி மாதம் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்படக்கூடிய மழை நிகழ்வுகளை பதிவு செய்துள்ளோம். நீண்ட கால வானிலை படிவங்கள் கொடுத்துள்ள மேல் அடுக்கு காற்றின் நிலை, மேற்கத்திய கலக்கங்களின் தன்மை, கீழை காற்றின் தன்மை போன்றவற்றை கொண்டு இந்த மழை நிகழ்வுகளின் கால அட்டவணையை கொடுத்துள்ளோம்.
வரும் நாட்களில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இத்தககைய நீண்ட கால மழை நிகழ்வு அட்டவணை கொடுக்க உள்ளோம். முதல் முறையாக இதை முயற்சி செய்து இருப்பதால் இதில் தவறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது, எனினும் படிப்படியாக வானிலை படிவங்களில் ஏற்படக்கூடிய சார்பு தவறுகளை (Model Bias) அறிந்து தவறுகளை குறைக்க முயற்சி செய்வோம்.
இந்த முயற்சி வெற்றி பெற தங்களது பகுதியில் பெய்த மழை பற்றிய தகவல் (Feedback) மிகவும் அவசியம் ஆகிறது. கொடுத்துள்ள கால அட்டவணை படி மழை பெய்தாலும் / பெய்யா விட்டாலும் தகவல் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். தவறுகளை அறிந்து திருத்தி கொள்ள இது வழி வகுக்கும்