தை மாதம் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள விவசாய பெருமக்கள் பரவலாக பொங்கல் பண்டிகை ஏற்பாடுகளில் ஈடுபட துவங்கி உள்ளனர். பல இடங்களில் சம்பா அறுவடை பணிகளும் துவங்கி உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலோர் மழை எதிர் பார்ப்பதில்லை. நெற்கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள போது பலத்த காற்று / பலத்த மழை இரண்டுமே விவசாயிகளை பொறுத்த வரை நஷ்டம் அளிக்க கூடிய நிகழ்வு. நெற்கதிர்கள் தரை தட்டினால் மகசூல் அளவு குறையக்கூடும் என்பதால் அறுவடை காலங்களில் பலத்த மழையை விவசாயிகள் விரும்புவதில்லை
நமது வானிலை வலைப்பதிவை பொறுத்த வரை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று தினங்களிற்கு அப்பால் நிகழக்கூடிய வானிலை நிகழுவாகளை பற்றி அறிவிப்பதில்லை. இந்தியா போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் பல வானிலை காரணிகள் மழை நிகழ்வுகளை மாற்றி அமைக்கும் நிலை இருப்பதால் பெரும்பாலும் வானிலை படிவங்களின் துல்லியமும் முன்னறிவிப்பு காலம் அதிகரிக்க அதிகரிக்க குறைந்து விடும். எனினும் சில சமயங்களில் வானிலை படிவங்களில் மொத்த ஒத்திசைவு சில வானிலை நிகழ்வுகளை கோடிட்டு காட்டக்கூடும். இந்த குறிப்புகளை நாம் பெரும்பாலும் இடர் நீக்கும் நிலையாகவே என்ன வேண்டும்.
இதை கருத்தில் கொண்டே இன்றைய பதிவிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பெரும்பாலும் பரவலாக தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்க கூடும் (வட தமிழக கடலோர பகுதியில் இன்றும் நாளையும் சில பகுதிகளில் மெல்லிய சாரல் மழை அதிகாலை வேலை பெய்யக்கூடும்). இந்த வார இறுதியில் வானிலை படிவங்கள் டெல்டா மாவட்ட பகுதிகளில் மழைக்கான சாத்தியக்கூறு இருப்பதாக கோடிட்டு காட்டுகின்றன. குறிப்பாக சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினதிற்கு இடைப்பட்ட பகுதிகளில் வெவ்வேறு திசையில் இருந்து வரும் காற்று ஊடுருவல் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமானது முதல் சற்றே பலத்த மழை பெய்யக்கூடும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஜனவரி 20ஆம் தேதி அன்று 8 செ.மீ. மழை பதிவானது பலருக்கு நினைவு இருக்கக்கூடும்.
அறுவடை என்பது மின் மாற்றி போல் அல்ல சொடக்கி விட்டால் விளக்கு எரிய. விவசாயிகள் தக்க முன்னேற்பாடு செய்து அறுவடைக்கு தயார் ஆக வேண்டும், இதற்காகவே இந்த பதிவை நாம் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு முன்பாகவே பதிவிட்டுள்ளோம். மழை வரும் என்பது உத்திரவாதம் இல்லை எனினும் குறைந்த முன்னேற்பாடுடன் விவசாயிகள் துரித காலத்தில் அறுவடை செய்ய தயாராக இருத்தல் அவசியம்.